10 வயது மகனுக்கு உடல் முழுவதும் சூடு - தந்தை கைது
குடியாத்தம் அருகே பள்ளிக்கு செல்லாமல் விளையாடிய தனது 10 வயது மகனுக்கு தந்தை சூடு வைத்த காரணத்தால் போலீசார் அவர்மீது 4 பிரிவுகளின் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (50). விவசாய தொழில் செய்து வரும் இவரது மனைவியின் பெயர் ஐமாவதி. இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐமாவதி தற்போது தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பூவரசன் தனது மகனுடன் பெரும்பாடி கொல்லிமேடு பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
பூவரசனின் மகன், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த சிறுவன், பள்ளிக்கு புறப்படாமல் படுத்திருப்பதை பார்த்த பூவரசன், அவரை எழுப்பியுள்ளார். ஆனால் சிறுவன் எழும்பாமல் தூங்கிக்கொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூவரசன், வீட்டிலிருந்த சிறிய கத்தியை எடுத்து, அதை நெருப்பில் வைத்து பின்னர் சிறுவனின் 2 கைகள், 2 கால்கள் மற்றும் தோள்ப்பட்டை பகுதிகளில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது.
உடலில் பல இடங்களில் சூடு வைக்கப்பட்டதால் சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த நடராஜன் என்பவர் ஓடிவந்து பார்த்தபோது, சிறுவன் காயங்களைக் காட்டி அழுதுள்ளார். உடனடியாக நடராஜன் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவனின் காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில், குடியாத்தம் தாலுகா போலீசார் பூவரசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர். பள்ளி மாணவனுக்கு தந்தையை கொடூரமாக சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.