இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!

இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!

சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பது நம் அனைவரது வீட்டிலும் சாதாரணமான ஒரு விஷயம். ஆனால், சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தப்படும்போது அவற்றின் தன்மைகள் மாறி, விஷமாக மாறக்கூடும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்திலும், நேரத்தை சேமிக்கவும் நாம் செய்யும் ஒரு பொதுவான செயல் 'மறுமுறை சூடுபடுத்துதல்' (Reheating). இந்திய குடும்பங்களில் இது ஒரு அன்றாட வழக்கமாகவே மாறிவிட்டது. ஹோட்டல்களில் வாங்கிய உணவு மிச்சமானால் அதனை மறுநாள் வரை வைத்திருந்து சூடுபடுத்தி சாப்பிடுபவர்கள் ஏராளம்.

ஆனால், எல்லா உணவுகளும் மறுமுறை வெப்பப்படுத்துவதை தாங்குவதில்லை. சில உணவுகள் சூடுபடுத்தப்படும்போது அவற்றின் சுவையை இழப்பதோடு மட்டுமல்லாமல், அமைதியாக நம் ஆரோக்கியத்தை கெடுக்கும் நஞ்சாகவும் மாறுகின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

உணவை சேமிக்கும் முறை மற்றும் வெப்பநிலையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது அவசியம். உணவை சமைத்த பிறகு அது ஆறும்போதும், மீண்டும் சூடுபடுத்தும்போதும் ஏற்படும் பாக்டீரியா வளர்ச்சியும், வேதியியல் மாற்றங்களும் உயிருக்கு ஆபத்தான உணவு நச்சாக மாறக்கூடும். மேலும், உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அழித்துவிடும் என்கிறது Harvard ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரை.

குறிப்பாக, புரதம் மற்றும் நைட்ரேட் நிறைந்த உணவுகளில் இம்மாற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன. எனவே, எந்த உணவுகளை மறுமுறை சூடுபடுத்தக்கூடாது மற்றும் எப்படிப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

மறுமுறை சூடுபடுத்தக் கூடாத 5 உணவுகள்

சாதம் : சாதத்தை சூடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது. அரிசியில் பேசிலஸ் செரியஸ் (Bacillus cereus) எனும் பாக்டீரியாவின் வித்திகள் (Spores) இருக்கலாம். இவை சமைத்த பிறகும் அழியாமல் இருக்கும். சாதத்தை சமைத்த பிறகு அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால், இந்த பாக்டீரியாக்கள் பெருகி நச்சுகளை உருவாக்குகின்றன.

இந்த நச்சுகளை மீண்டும் சூடுபடுத்துவதன் மூலம் அழிக்க முடியாது. எனவே, சாதத்தை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும் என 2017ம் ஆண்டு NCBI ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு: சமைத்த உருளைக்கிழங்கை அறை வெப்பநிலையில் வைத்தால், அதில் க்ளோஸ்ட்ரிடியம் பொட்லினம் (Clostridium botulinum) எனும் அபாயகரமான பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது. குறிப்பாக 'அலுமினியம் ஃபாயில்' பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட உருளைக்கிழங்கில் இந்த ஆபத்து அதிகம். மீண்டும் சூடுபடுத்துவது இந்த பாக்டீரியாக்களை அழிப்பதில்லை. உருளைக்கிழங்கு உணவுகளை சமைத்தவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மட்டுமே பாதுகாப்பானது.

முட்டை: முட்டையில் புரதம் அதிகம். சமைத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தும்போது அதன் புரத கட்டமைப்பு சிதைந்து, செரிமான கோளாறுகளை உண்டாக்கும். மேலும், அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட முட்டையில் சால்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா வேகமாகப் பரவும். மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தும்போது வெப்பம் சீராகப் பரவாமல் போனால், பாக்டீரியாக்கள் அழியாமல் தங்கிவிடும். முட்டை கறிகளை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கீரை வகைகள் : கீரைகளில் இயற்கையாகவே நைட்ரேட்டுகள் (Nitrates) உள்ளன. கீரையை சமைத்து மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட்டுகள் 'நைட்ரைட்டுகளாகவும்' (Nitrites), பிறகு புற்றுநோய்க்கு காரணியாக கருதப்படும் 'நைட்ரோசமைன்களாகவும்' மாறுகின்றன. இது செரிமான எரிச்சலையும் குழந்தைகளுக்கு பல உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே கீரைகளைச் சமைத்த உடனேயே உண்பதுதான் சிறந்தது.

சிக்கன்: கோழி இறைச்சியில் உள்ள கடினமான புரதங்கள் மீண்டும் சூடுபடுத்தப்படும்போது அதன் தன்மையை மாற்றிக்கொள்கின்றன. இது செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக மசாலா மற்றும் கிரேவி சேர்த்த சிக்கன் உணவுகளில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பாக்டீரியாக்கள் விரைவாக தோன்றும். இறைச்சியை மீண்டும் சூடுபடுத்தும்போது அதன் உட்பகுதி வரை ஆவி பறக்கும் அளவுக்கு சூடாக்குவது அவசியம்.

உணவுப் பாதுகாப்பு என்பது சமைப்பதில் மட்டுமல்ல, அதை சேமிப்பதிலும் உள்ளது. உணவை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்துவதைத் தவிர்ப்பதும், சமைத்த உணவை விரைவாகக் ஃப்ரிட்ஜில் வைப்பதும் பாதுகாப்பானது.