ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை வழக்கு! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில், குற்றவாளிக்கு அந்நாட்டு மாவட்ட நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
ஜப்பானின் சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவராகவும் அந்நாட்டின் பிரதமராகவும் (டிச.2012 முதல் செப்.2020 வரை) ஷின்சோ அபே பதவி வகித்துள்ளார். கடந்த 2022 ஜூலை 8ம் தேதி மேற்கு ஜப்பானிய நகரமான நாராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அபே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமகாமி (45) சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தன் மீதான கொலைக் குற்றச்சாட்டை யமகாமி ஒப்புக்கொண்டார். இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, நாரா மாவட்ட நீதிமன்றம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நேற்று உத்தரவிட்டது. தென் கொரியாவின் சர்ச்சைக்குரிய ஒரு மத அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்துள்ளார் யமகாமியின் தாய்.
இதன் அடிப்படையில், அந்த அமைப்புக்குப் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியதால் அவரது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைக்குக் காரணமான அந்த அமைப்புக்கு ஆதரவாக இருந்ததால் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றதாக யமகாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.