கர்நாடக மாநிலம் தார்வாட் மானசூர் சாலை ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உயிரிழந்து கிடந்தது தார்வாட்டில் உள்ள காந்தி சவுக்கில் வசித்து வந்த ஜகியா முல்லா என்பது தெரியவந்தது. அவரது பெற்றோருக்கு தகவல் அளித்து வரவழைத்த போலீசார் அவர்களது பெண் தான் என்பதை உறுதி செய்தனர். பாராமெடிக்கல் மாணவியான ஜாகியா கடந்த ஆண்டு படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
அவரது முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த துப்பாட்டாவால் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. கொலை வேறு எங்காவது நடைபெற்று உடலை இங்கு கொண்டு வந்து போட்டார்களா? என்பது தெரியாத நிலையில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி செவ்வாய்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியேறிய ஜாகியா ஒரு வேலைக்காக ஆய்வகத்திற்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ஜ் ஆப் செய்யப்பட்டிருந்தது. புதன்கிழமை போலீசார் தகவல் கொடுத்த பிறகு தான் அவர் உயிரிழந்திருப்பது குடும்பத்தினருக்கே தெரியவந்துள்ளது. இந்நிலையில், செல்போன் டவர் சிக்னல்களை ஆய்வு செய்த போலீசாருக்கு ஒரு புதிய துப்பு கிடைத்தது. சம்பவத்தன்று ஜாகியாவுடன் அவரது உறவினரும், காதலனமான சாபிர் முல்லா என்பவர் உடனிருந்துள்ளார். அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
சாபிர் மற்றும் ஜாகியா இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று மாலை இருவரும் வெளியே சென்றபோது, திருமணம் தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாபிர், ஜாக்கியாவின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு, சடலத்தை புதர்க்காட்டில் வீசிவிட்டு சாபிர் தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தபோது அவர்களுடன் எதுவும் தெரியாதது போல் சுற்றி வந்துள்ளார். போலீசாரின் பக்கத்திலேயே குற்றவாளி இருந்தபோதும் அவர்களால் அப்போது அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது கொலையை ஒப்புக்கொண்டார். இந்தக் கொலையில் சாபிரின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு கொலையை செய்து விட்டு எளிதாக தப்பிவிடலாம் என்ற கனவு கண்டு கொண்டிருந்த காதலன் கடைசியில் வசமாக சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.