தனி சின்னத்தில் போட்டியிடுமா மக்கள் நீதி மய்யம்? - கமல்ஹாசன் இன்று ஆலோசனை

தனி சின்னத்தில் போட்டியிடுமா மக்கள் நீதி மய்யம்? - கமல்ஹாசன் இன்று ஆலோசனை

திமுக கூட்டணியில் மநீம-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் பணியைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அதே 'டார்ச் லைட்' சின்னம் மீண்டும் அந்த கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் விஜய்யின் தவெக-வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், மநீம கட்சிக்கு அதன் அடையாளச் சின்னமே கிடைத்துள்ளது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், சின்னம் ஒதுக்கப்பட்ட கையோடு அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது.

தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க உள்ளது.

குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.