பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு: தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் எம்.பி உள்ளிட்டோர் கைது
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுராந்தகத்தில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக - அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டமானது சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தே.ஜ கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப் போவதாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலைதிட்டம்) தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து, பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், பிரதமரின் வருகையின் போது கருப்புக்கொடி காட்டுவதுடன், கருப்பு பலூன்களை பறக்க விடுவது, வாயில் கருப்பு துணி அணிந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மாநாட்டிற்குள் நுழைவது உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் கட்சித் தொண்டர்கள் தங்களது வீடுகளின் முன்பும் கருப்புக் கொடிகளை பறக்கவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டன.