அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000-இல் இருந்து ரூ.3,400-ஆக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் தனது உரையை நிகழ்த்தாமலேயே வெளியேறினார்.

கூட்டத்தொடர் தொடங்கிய போது தேசிய கீதம் இசைக்கப்படாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்ததாக தெரிகிறது. ஆளுநரின் இந்த செயலுக்கு சபாநாயகரும், முதலமைச்சரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், இனி சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஆளுநரின் உரையே இல்லாமல் தொடங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள பிற மாநில முதலமைச்சர்களுடன் கலந்தோசிக்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில், இன்று நடைபெற்ற 5-ஆம் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு பேசினார்.

அதன்படி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், அவை வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும், 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.2000-ஐ, ரூ.3,400ஆக உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுதவிர, தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, தனது பேச்சை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஆட்சி குறித்து பேசினார். அப்போது, "நான் தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்று 1,724 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இந்த நாட்களில் நான் 8,658 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். 15,117 அரசு கோப்புகளை சரிபார்த்து கையெழுத்திட்டுள்ளேன். மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கியிருக்கிறோம். அதாவது ஒரு குடும்பத் தலைவிக்கு ரூ.29,000 வழங்கியுள்ளோம்" என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.