கிரீன்லாந்து விவகாரம் எங்களுக்கு தேவையற்றது: ரஷ்ய அதிபர் புதின் கருத்து
கிரீன்லாந்து விவகாரம் எங்களுக்கு தேவையற்ற விஷயம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஐரோப்பிய நாடான டென்மார்க் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்பந்தம் அளித்து வருகிறார். மேலும், கிரீன்லாந்தில் வாழும் சுமார் 57 ஆயிரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் டாலர் அளிப்பேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.
இதற்கு டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பை அடுத்து கிரீன்லாந்தில் டென்மார்க் அரசு படைகளை குவித்து கண்காணித்து வருகிறது. இதற்கிடையில் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் மாஸ்கோவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு புதின் அளித்த பதில் வருமாறு: கிரீன்லாந்து பகுதியை ஒரு காலனியாகவே டென்மார்க் நிர்வகித்து வருகிறது. அப்பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
எந்த காரணத்துக்காகவும் நாங்கள் கிரீன்லாந்தை உரிமம் கொண்டாட மாட்டோம். இது எங்களுக்கு தேவையில்லாத விஷயம். இந்த பிரச்சினையை அவர்களே (அமெரிக்கா, டென்மார்க்) தீர்த்து கொள்வார்கள். இவ்வாறு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வாபஸ்
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வர்த்தக வரி விதிப்பு மிரட்டலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக வாபஸ் பெற்றார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிலைநாட்ட ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைக்க தவறினால் 8 ஐரோப்பிய நாடுகளின் மீது கடுமையான வர்த்தக வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரிவிதிப்பு திட்டத்தை கைவிடுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த திடீர் மனமாற்றத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.