கேரளா பேரவை தேர்தலில் நடிகை பாவனா போட்டி?.. மா.கம்யூ கட்சியில் இணைவதாக தகவல்
கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராகப் போட்டியிடுவதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவலை நடிகை பாவனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கேரளாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரபல நடிகை பாவனா ஆளுங்கட்சியான சிபிஐ(எம்) கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கப்போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீ போலப் பரவின. கடந்த 2013ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் செய்திருந்தாலும், நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்து வரும் அவர், தற்போது திடீரெனத் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாவனா தனது 90வது படமான ‘அனோமி’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் வேளையில் இந்தத் தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் பாவனா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியைப் பார்த்துச் சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை; இது முற்றிலும் பொய்யான செய்தி; மிகப்பெரிய ஜோக்; எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லை; இந்த வதந்தி எப்படிப் பரவியது என்றே தெரியவில்லை’ என்று கூறி சிரித்தார். நான் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான செய்தியைப் பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை.