மகளை விட அதிக மார்க்... மாணவனுக்கு விஷம் வைத்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை!
காரைக்காலில் தனது மகளுடன் படித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவனுக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில், பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில் காரைக்கால் நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - மாலதி தம்பதி. இவர்களின் மகன் பாலமணிகண்டன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பாலமணிகண்டன் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்து வந்துள்ளார். இது பாலமணிகண்டனுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவுக்கு பிடிக்கவில்லை. மேலும், தன் மகளை விட நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுப்பதன் காரணமாக பாலமணிகண்டனை கொலை செய்யவும் சகாயராணி விக்டோரியா திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, கடந்த 02.09.2022 அன்று சகாயராணி விக்டோரியா, மாணவன் பாலமணிகண்டனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். அதை அறியாமல் குடித்த அப்பாவி சிறுவன் பாலமணிகண்டன், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வ முத்துக்குமாரசாமி, குற்றவாளி சகாயராணி விக்டேரியாவுக்கு தூக்கு தண்டனை அளிக்குமாறு வாதாடினார். வாதத்தைக் கேட்ட நீதிபதி, தூக்கு தண்டனை கொடுக்கும் அளவுக்கு இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து, சகாயராணி விக்டோரியாவிற்கு ஆயுள் தண்டனையும், 20,000 ரூபாய் அபதாரமும் விதித்து தீர்ப்பளித்தார்.