ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன.31-ம் தேதி நடைபெறுகிறது.
தை தேரோட்ட திருவிழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார்.
பின்னர் கொடிப் படம் புறப்பட்டு வந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திரை வீதிகளில் வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இன்று (ஜன.24) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
பின்னர், விழாவில் தினமும் காலையில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஜன.29-ம் தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 30-ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன.31-ம் தேதி காலை நடைபெறுகிறது. நிறைவு நாளான பிப்.2-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வருகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்