6 மணி நேரத்திற்கும் குறைவா தூங்குறீங்களா? எச்சரிக்கை!
இன்றைய நவீன உலகில், 'பிஸியாக' இருப்பது ஒரு பெருமையாக பார்க்கப்படுகிறது. வேலையை முடிப்பதற்காக நள்ளிரவு வரை கண் விழிப்பதும், காலையில் சோர்வை விரட்ட காபியை துணையாக கொள்வதும் நம்மில் பலருக்கு பழகிப்போன ஒன்று. ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தூங்கினால் போதும், மீதி நேரத்தில் உழைக்கலாம் என்று நாம் நினைக்கிறோம்.
தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது, வெறும் சோர்வை மட்டும் தருவதில்லை, அது நம் உடலின் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மெல்ல மெல்ல சிதைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தூக்கத்தை குறைப்பது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று நாம் நம்பினாலும், உண்மையில் அது நம் ஆயுளை குறைத்துகொண்டிருக்கிறது. தூக்கமின்மையால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இதைவிட குறையும் போது உடலில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு: தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 7 முதல் 8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு 'டைப் 2 நீரிழிவு' நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
மேலும், தூக்கம் குறையும் போது பசியை தூண்டும் 'க்ரெலின்' (ghrelin) ஹார்மோன் அதிகரித்து, வயிறு நிறைந்த உணர்வை தரும் 'லெப்டின்' (leptin) ஹார்மோன் குறைகிறது. இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமன் (BMI அதிகரிப்பு) ஏற்படுகிறது என Extent and Health Consequences of Chronic Sleep Loss and Sleep Disorders என்ற தலைப்பில் வெளியான NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதய ஆரோக்கியம்: தூக்கமின்மை இதய ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு ரத்த நாளங்களில் அடைப்பு (Atherosclerosis) ஏற்பட 27% கூடுதல் வாய்ப்பு உள்ளது என Sleeping Less Than Six Hours a Night May Increase Cardiovascular Risk என்ற ஆய்வுக்கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது. தூக்கத்தின் போதுதான் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன. அந்த நேரம் குறையும் போது ரத்த அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரித்து இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.
மூளை ஆரோக்கியம் மற்றும் மனநிலை: குறைவாகத் தூங்குபவர்களின் மூளையில் நச்சுக்கள் தேங்குவதாகவும், இது பிற்காலத்தில் மறதி நோய் (Dementia) வரக் காரணமாக அமைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது அன்றாட கவனிப்புத் திறன், நினைவுத்திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றலைப் பாதிக்கிறது. மேலும், தூக்கமின்மை மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது என How sleep deprivation can harm your health என்ற ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம்: தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான மரபணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் உடல் அடிக்கடி நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடுகிறது மற்றும் காயங்கள் குணமாக அதிக காலம் எடுத்து கொள்கிறது என்கிறது ஆய்வு.
ஹார்மோன் மற்றும் உடல் வளர்ச்சி: உடல் திசுக்களை சரி செய்யவும், தைராய்டு செயல்பாடுகளை சீராக வைத்திருக்கவும் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும் போது தசை இழப்பு, எலும்பு ஆரோக்கியம் குறைதல் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை ஏற்படுகின்றன.
உயிரிழப்பு ஆபத்து மற்றும் அன்றாட செயல்பாடு: ஆய்வுகளின்படி, 5 மணி நேரம் அல்லது அதற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட மரணமடைவதற்கான வாய்ப்பு 15% அதிகமாக உள்ளது. இது தவிர, தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, வாகன விபத்துக்கள் மற்றும் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது என்கிறது NIH ஆய்வு.
காபி போன்ற பானங்களை நம்பி தூக்கத்தைத் தள்ளிப்போடுவது ஒரு நச்சுச் சுழற்சியாக மாறி உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதிக்கும்.