ஆப்கனுக்கு எதிரான 3-வது டி20: மே.இ.தீவுகள் வெற்றி
ஆப்கானிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டம் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரண்டன் கிங் 35 பந்துகளில், 47 ரன்கள் எடுத்தார். 151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 58 பந்துகளில், 71 ரன்கள் எடுத்தார். 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணியின் ஷமர் ஸ்பிரிங்கர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.