பட்டப்பகலில் பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; நெல்லையில் பரபரப்பு

பட்டப்பகலில் பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; நெல்லையில் பரபரப்பு

பட்டப்பகலில் பஞ்சர் கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நெருங்கிய உறவினரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள அடைச்சாணி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனி பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில், சரவணன் வழக்கம் போல கடைக்கு செல்லும் முன்பு ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் சரவணனை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பாக்குடி போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை செய்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், அருகில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், சரவணனின் நெருங்கிய உறவினரான பாலமுருகன் (30) என்ற இளைஞர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து பாலமுருகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக சரவணனை பாலமுருகன் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் பெண் விவகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.