கொழுப்பு படிந்த கல்லீரலை குணப்படுத்த உதவும் 3 பானங்கள்: எய்ம்ஸ் மருத்துவர் பரிந்துரை!

கொழுப்பு படிந்த கல்லீரலை குணப்படுத்த உதவும் 3 பானங்கள்: எய்ம்ஸ் மருத்துவர் பரிந்துரை!

இன்றைய நவீன காலத்தில் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) எனப்படும் கல்லீரலில் கொழுப்பு படிதல் பிரச்சனை உலகெங்கிலும் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

நாம் உட்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அளவுக்கு அதிகமான சர்க்கரை, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவை இதற்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கல்லீரல் என்பது நம் உடலின் ஒரு மிக முக்கியமான 'சுத்திகரிப்பு நிலையம்' போன்றது. அதில் கொழுப்பு அதிகமாக சேரும்போது, அது படிப்படியாக வீக்கத்தை ஏற்படுத்தி, நாளடைவில் கல்லீரல் செயலிழப்பு போன்ற மோசமான நிலைக்கு கொண்டு செல்லக்கூடும்.

மது அருந்தாதவர்களுக்கும் கூட இன்று இந்த பாதிப்பு ஏற்படுவது கவனிக்கத்தக்கது. முறையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் சில குறிப்பிட்ட இயற்கை பானங்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்கிறார் ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மருத்துவர் சௌரப் சேத்தி.

கல்லீரலில் கொழுப்பு நோய் என்றால் என்ன? கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையே நாம் 'ஃபேட்டி லிவர்' என்கிறோம். இது முக்கியமாக இரண்டு வகைப்படும்.

  • ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்: இது நீண்டகாலமாக மது அருந்துவதால் கல்லீரல் சேதமடைந்து கொழுப்பு படிவதைக் குறிக்கும்.
  • நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் (NAFLD): மது அருந்தாதவர்களுக்கும் கூட, சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளால் இது ஏற்படுகிறது.

சரியான நேரத்தில் இதை கவனிக்காவிட்டால், இது கல்லீரல் வீக்கம் (Fibrosis) மற்றும் கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) போன்ற உயிருக்கே ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லும்.

கல்லீரலைப் பாதுகாக்கும் 3 முக்கியமான பானங்கள்: டாக்டர் சௌரப் சேத்தி அவர்கள் பரிந்துரைக்கும் கீழ்க்கண்ட மூன்று பானங்கள் கல்லீரல் செயல்பாட்டை தூண்டி, கொழுப்பை குறைக்க உதவுகின்றன என்கிறார்.

கிரீன் டீ : கிரீன் டீயில் 'கேட்டச்சின்கள்', குறிப்பாக EGCG எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது கல்லீரல் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை குறைத்து, நொதிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது மட்டுமே முழுமையான பலனை தரும்.

காபி: காபி குடிப்பது கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான அளவில் காபி குடிப்பது கல்லீரல் தழும்பு ஏற்படுவதை குறைக்கிறது. காபியில் உள்ள பாலிபினால்கள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கறுப்பு காபியாக குடிப்பது சிறந்தது. சர்க்கரைக்கு மாற்றாக தேவைப்பட்டால் மட்டும் தேன் அல்லது ஸ்டீவியா போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் உள்ள 'பீட்டாலைன்ஸ்' என்ற வேதிப்பொருள் கல்லீரலுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறது. இது கல்லீரல் செல்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறைக்கு இது துணை புரிகிறது. ஆனால், பீட்ரூட்டில் இயற்கையாகவே சர்க்கரை இருப்பதால், இதை மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கான கூடுதல் குறிப்புகள்: வெறும் பானங்களை மட்டும் குடித்தால் போதாது, அவற்றுடன் சில அடிப்படை வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்ய வேண்டும்.

சர்க்கரையைக் குறைத்தல்: இனிப்புகள் மற்றும் சோடா பானங்களை தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் 'ஜங்க் ஃபுட்'களை குறைக்க வேண்டும்.

உடற்பயிற்சி: தினசரி நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்.

மதுவைத் தவிர்த்தல்: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க மதுப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது நல்லது.