கல்லால் அடித்து ரவுடி கொலை - 5 பேர் கைது
வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கத்தில் மதுபோதையில் ரவுடியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர் மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இவர் அதே பகுதியில் உள்ள U பிளாக் குடியிருப்பு அருகே உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான விஜயகுமார், கார்த்திக், சரத்குமார், சரண்ராஜ், குமார் ஆகிய 5 பேருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது மது போதையில் சரத்குமார், விஜயகுமார் இருவரும் இணைந்து கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, கார்த்திகேயகனை அவர்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், மது பாட்டில்களாலும், கற்களாலும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால், கார்த்திகேயனை பழிவாங்கும் எண்ணத்துடன் அன்றிரவு குமார் தனது நண்பர்களுடன் இணைந்து அவரை தேடியுள்ளார். அப்போது கார்த்திகேயன் யூ பிளாக் பார்க்கில் மது அருந்திக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற குமார் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேர், கார்த்திகேயனுடன் நைசாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் கார்த்திகேயனுக்கு போதை அதிகமானதும், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அவரது தலையில் கல்லை போட்டு அவர்கள் கொலை செய்ததது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, கார்த்திகேயனை கொலை செய்த எழில் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார், கார்த்திக், சரத்குமார், சரண்ராஜ் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.