அமைச்சர் நேருவுக்கு எதிராக முதல்கட்ட விசாரணை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அமலாக்கத் துறை குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல்கட்ட விசாரணை நடத்தி வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணி
நியமனங்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக்கோரி மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆதிநாராயணனும் அதிமுக எம்.பி. இன்பதுரையும் மனு தாக்ல் செய்திருந்தனர்.அதில் அமைச்சர் நேரு, அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல்கட்ட விசாரணை நடத்தி வருவதாகக் கூறி அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும் டிஜிபி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக ஜன.28-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.