வடிகாலுக்கு கொசுவலை போர்த்திய விவகாரம் - மேயர் பிரியா விளக்கம்
வடிகாலில் கொசுவலை போர்த்தியது மாநகராட்சி அறிவிப்பால் செய்யப்பட்டது இல்லை என்றும், மாமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின் பேரில் செய்திருக்கிறார்கள் எனவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ சார்பில் ஆட்டுத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, “கடந்த 125 ஆண்டுகளாக இங்கு இறைச்சிக்கூடம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை முழுவதும் உள்ள வியாபாரிகள் இங்கிருந்து ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை வாங்கிச்சென்று சில்லறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்யும் அளவிற்கு இந்த கூடமாக பெரிய அளவில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த இடத்தை நவீனப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் ஆணைப்படி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து ஸ்மார்ட் ஹவுஸ் பணியை தொடங்கி இருக்கிறது. இந்த இடம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், ஏற்கனவே இங்கிருந்த ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி கடைகள் அவரவர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
அதற்காக, 53 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீனப்படுத்தப்பட்டு வரும் இக்கட்டடத்தை பிப்ரவரி மாதத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இறைச்சி கழிவுகள் மூலம் உருவாகிற துர்நாற்றத்தை தடுக்க, அவற்றை நவீன தொழில்நுட்ப முறையில் சுத்திகரிப்பு செய்து மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ஆட்டு இறைச்சி சில்லறை விற்பனையாளர்களுக்கும் இந்த பகுதியில் கடை ஒதுக்க மனு அளித்தது குறித்த கேள்விக்கு, “இப்பகுதி சில்லறை கடைகள் வைப்பதற்கான இடம் கிடையாது. சென்னையில் புளியந்தோப்பு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் அதற்கான இடங்கள் இருக்கின்றன. இந்த பகுதியில் முற்றிலும் ஆடுகளை வெட்டி வெளியில் கொண்டுபோய் விற்பனை செய்வதற்காக மட்டுமே” என்றார்.
முன்னதாக, சமீபத்தில் திருவொற்றியூரில் வடிகால் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கொசுவலை வைப்பது போன்ற காணொளி வெளியானது குறித்த கேள்விக்கு, "சென்னை மாநகராட்சி இப்படியொரு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அது கொசுக்களுக்காக போடப்பட்டது இல்லை. அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கொடுத்த யோசனையின் பேரில் இந்த செயலை செய்திருக்கிறார்கள். அது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசியது பற்றி அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டதற்கு, "சட்டமன்றம் நடக்கும்பொழுது இதுகுறித்து பதில் அளிக்க முடியாது" எனக் கூறிவிட்டு சென்றார்.