'டிட்வா' புயல் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

'டிட்வா' புயல் - தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

டிட்வா புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா, “டிட்வா புயல் (ditwah cyclone) தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 150 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, நாளை அதிகாலை வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடதமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலை கொள்ளும். டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் போது, வடதமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளிலிருந்து இன்று நள்ளிரவில் 60 கி.மீ. தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ தொலைவிலும் நாளை மாலை 25 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கும்.

அதி கனமழைக்கு வாய்ப்பு

இன்று (நவ.29) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்டும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமாகவும், கடலோர தமிழகத்தில் மிகத் தீவிரமாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும். இன்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டரும், வேதாரண்யத்தில் 19 சென்டி மீட்டரும், வேளாங்கண்ணியில் 13 சென்டி மீட்டரும், திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% அதிகமாக பதிவாகியுள்ளது. புயல் கரையை கடக்க வாய்ப்பு இல்லை, கடலிலேயே நிலவும் வாய்ப்பு தான் உள்ளது. அதனால், இன்று எண்ணூர் துறைமுகத்தில் 40 கி.மீ வேகத்திலும், பாம்பன் துறைமுகத்தில் 60 கி.மீ வேகத்திலும் காற்றின் வேகம் பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் D5 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறினார்.