37 வருடங்களுக்குப் பிறகு சர்ப்ரைஸ் எண்ட்ரீ தரும் ரஜினியின் 2 படங்கள்

37 வருடங்களுக்குப் பிறகு சர்ப்ரைஸ் எண்ட்ரீ தரும் ரஜினியின் 2 படங்கள்
இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. 37 வருஷத்துக்குப் பின் சர்ப்ரைஸ் என்ட்ரியாக ஒரு படம் ரிலீஸாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த வருடத்தின் கோடை விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே தான் 37 வருஷத்துக்குப் பின் ரஜினி நடிப்பில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக ஒரு படம் ரிலீஸாகிறது. தமிழ் உட்பட மொழிகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் ரீனா ராய். இவரின் சகோதரரான தயாரிப்பாளர் ராஜா ராய் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா மற்றும் மறைந்த நடிகர்களான ஜகதீப், அம்ரிஷ் பூரி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தி திரைப்படம் தான் 'ஹம் மே ஷாஹென்ஷா கோன்' (Hum Mein Shahenshah Koun). இந்தத் திரைப்படம் 1989-ல் படமாக்கப்பட்டது. ஆனால் இத்தனை வருடங்களாக இந்தப் படம் வெளியாகவில்லை.
37 வருடங்களாக படம் வெளியாகாமல் இருக்க காரணம் இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பல சோகமான சம்பவங்கள் நடந்தன. 1989-ல் படப்பிடிப்பு முடிந்ததும், ராஜா ராயின் மகன் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஹர்மேஷ் மல்ஹோத்ரா காலமானார். இப்படியான தனிப்பட்ட இழப்புகளால் 37 ஆண்டுகளாக இந்தப் படம் முடங்கிக் கிடந்தது.
இதற்கிடையே தான் ராஜா ராய் மீண்டும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியுள்ள ராஜா ராய், "இன்று இந்தப் படம் வெளியாவது எனக்கு ஒரு குழந்தை பிறப்பது போன்ற உணர்வைத் தருகிறது" என்று கூறியிருக்கிறார்.
AI தொழில்நுட்பத்தின் உதவி பழைய படத்தை இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நடிகர்களின் அசல் நடிப்பை மாற்றாமல், ஒரு நவீன டிஜிட்டல் அனுபவத்தைத் தர முடியும் என இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் அஸ்லம் மிர்சா தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்காக நடிகர்களிடம் வாங்க வேண்டிய அனைத்து அனுமதிகளையும் (NOC) 90-களிலேயே வாங்கிவிட்டதாகத் தயாரிப்பாளர் ராஜா ராய் கூறியுள்ளார். நடிகர் சத்ருஹன் சின்ஹா படக்குழுவினரை வாழ்த்தியதுடன், விளம்பரப் பணிகளிலும் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை விரைவில் சந்தித்து, தென்னிந்தியாவில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவது குறித்து பேச உள்ளதாகவும் ராஜா ராய் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் 80-களில் பாலிவுட்டில் மிக பிஸியாக இருந்த சமயத்தில் இந்தப் படத்தில் நடித்தார். இதனிடையே, 37 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படத்தின் மூலம் ரஜினியின் இளமைக்கால நடிப்பைப் பெரிய திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த வருடம் ஏற்கனவே ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு ஒரு படம் என ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ரிலீஸாகி வந்தன. இந்தநிலையில் தான் தற்போது இந்த வருடத்தில் 2 ரஜினி படங்கள் ரிலீஸாகவுள்ளன.