'சினிமாவில் சாதி, மதம் இருக்கிறது' - ஏ.ஆர். ரகுமான் குறித்து கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கருத்து
சினிமாவில் சாதி, மதம் இருக்கிறது. அதனை எதிர்த்து போராடுவது தான் சமத்துவம் என்று ஏ.ஆர். ரகுமான் குறித்து கன்னட நடிகர் சதீஷ் நினாசம் கூறினார்.
பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள 'ரைஸ் ஆப் அசோகா' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கதாநாயகன் சதீஷ் நினாசம், கதாநாயகி காந்தாரா புகழ் சபதமி கவுடா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தின் கதாநாயகன் சதீஷ் நினாசம் மேடையில் பேசுகையில், ''கடந்த பத்து ஆண்டுகளில் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறேன், இருப்பினும் வெகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இந்த படத்தின் கதையானது தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் நடப்பதை மையமாக கொண்டுள்ளது.
அந்த வகையில் படத்தின் வியாபாரத்தை பொருத்தமட்டில் முதலாவதாக கன்னடம், இரண்டாவதாக தமிழை எதிர்பார்க்கிறோம். 1971 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முடி திருத்துவோர் சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எப்படி சரி செய்யப்பட்டது என்பது தொடர்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அத்துடன் கற்பனை காட்சிகளை இணைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

காந்தாரா திரைப்படத்தின் கதாநாயகி இந்த படத்தில் நடிக்க வைத்திருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார். அதனை தாண்டி வியாபார யுக்தியாகவும் அவரை நடிக்க வைத்தோம். கேஜிஎஃப், காந்தாரா போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் நன்றாக ஓடின. அதே போல இந்தத் திரைப்படமும் தமிழகத்தில் நன்றாக ஓடுமென என்னுடைய டிஸ்ட்ரிபியூட்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழ் ரசிகர்களுடைய பார்வை அனைத்து மொழி திரைப்படத்தையும் பார்க்கக் கூடிய அளவிற்கு தற்போது விசாலமாக இருக்கிறது.'' என்றார்.
நாடக நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறீர்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, '' மேடையில் நாயகனாக நடித்த போது எனக்கு பல பெரிய கதாபாத்திரங்கள் கிடைத்திருந்தன. திரைப்படத்தில் வாய்ப்பு தருகிறேன் என ஒருவர் என்னை அழைத்து சாப்பாடு கொடுத்து வெகு நேரம் காக்க வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் நானும், இயக்குநரும் மற்றும் ஒரு பெண் மட்டும் இருந்தோம். அப்போது என்ன காட்சி என கேட்ட பொழுது, ''RAPE'' காட்சி எனக் கூறினார்கள். அதற்கு எனக்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்'' என்றார்.
சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இஸ்லாமியர் என்பதால் வட இந்தியாவில் அவருக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, '' ஏ.ஆர். ரகுமான் விவகாரம் தொடர்பாக முழுவதுமாக எனக்கு தெரியாது, இருப்பினும் மதத்தை வைத்து ஒருவருக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு தடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. திரை உலகில் சாதி, மதம் இருக்கிறது. அதனை எதிர்த்து போராடுவது தான் சமத்துவம். இங்கு அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்'' என்றார்.