"திருமணத்தன்று படுக்கையில் வேறு பெண்ணுடன்..." - பலாஷ் குறித்து ஸ்மிருதி மந்தனாவின் தோழி அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசைக்கலைஞர் பலாஷ் முச்சால் இடையேயான திருமணம் நின்று போனது குறித்து தற்போது சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஸ்மிருதியின் சிறுவயது நண்பர் விஞ்யான் மானே தெரிவித்துள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் 2025 நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், அந்தத் திருமணம் பாதியிலேயே நின்றது பெரும் பேசுபொருளானது. இப்போது அது குறித்த திடுக்கிடும் காரணங்களை ஸ்மிருதியின் சிறுவயது நண்பர் விஞ்யான் மானே வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 23, 2025 அன்று திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது நடந்த விஷயங்கள் என விஞ்யான் மானே இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியின்படி, திருமண கொண்டாட்டங்களின் போது, பலாஷ் முச்சால் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்ததை ஸ்மிருதியின் நண்பர்கள் பார்த்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் கடும் கோபமடைந்தனர். அவர்கள் பலாஷை பிடித்து சரமாரியாக அடித்ததாக மானே தெரிவித்துள்ளார். பலாஷ் குடும்பத்தினர் ஸ்மிருதியை ஏமாற்றிவிட்டதாகவும் விஞ்யான் மானே குற்றம் சாட்டியுள்ளார். வெறும் திருமண விவகாரத்தை மட்டும் பேசாமல், பலாஷ் மீது பண மோசடி புகாரையும் விஞ்யான் மானே சுமத்தியுள்ளார்.
பலாஷ் தனது திரைப்படத்திற்காக தன்னிடம் ரூ. 40 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், படம் ரிலீஸ் ஆக கூடுதல் பணம் வேண்டும் என்றும், இல்லையென்றால் முதலீடு செய்த பணத்தைத் தரமாட்டோம் என்றும் பலாஷின் தாயார் அமிதா முச்சால் தன்னை மிரட்டியதாகவும் மானே புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிராவின் சாங்லி பகுதியில் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, விஞ்யான் மானே குற்றச்சாட்டு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் பதில் அளித்துள்ளார். அதில், "என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இவை கூறப்பட்டுள்ளன. இதை நான் சும்மா விடமாட்டேன். எனது வழக்கறிஞர் மூலம் சட்டப்படி இதனை எதிர்கொள்வேன்" என்று பலாஷ் கூறியிருக்கிறார்.
ஸ்மிருதி மந்தனாவின் நண்பர் விஞ்யான் மானே கூறுவது உண்மையென்றால், பலாஷின் தவறான நடத்தையே இந்தத் திருமணம் முறிவுக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது. ஆனால், பலாஷ் இதனை மறுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறி வருகிறார். இதனால் இந்த விவகாரம் புதிய திருப்பம் எடுத்துள்ளது.