மதுரையில் போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்? வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய உயர் நீதிமன்றம்!

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மானகிரி சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் குமார். நேற்று காலை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா உள்ளிட்ட காவலர்கள் தினேஷ் வீட்டிற்கு வந்து வழக்கு விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு அண்ணா நகர் பகுதியில் உள்ள கண்மாயில் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா தனது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்து கொன்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டி நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது தினேஷ் குமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல் ஆய்வாளர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்க வேண்டும் என்றும், வழக்கை மனித உரிமை ஆணையம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. உயர் நீதிமன்றம் பல்வேறு கண்டனங்களை இந்த காவல் ஆய்வாளருக்கு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பட்டியலின சமூகத்தினர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார் எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டனர்.