வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்துவதற்கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதனால் வார விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய நபர்கள் படிவம்–6 ஐ, உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கெனவே உள்ள பெயரை நீக்க கோர படிவம்–7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்–8 மூலம் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.