நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய்: எதனுடன் சேர்த்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்?
இன்றைய வாழ்க்கை முறையில், மாறிவரும் தட்பவெப்ப நிலை மற்றும் பெருகிவரும் நோய்த்தொற்றுகளுக்கு இடையே நம்மை தற்காத்துகொள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' என்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. உடல் நலனை பேண பல வழிகள் இருந்தாலும், நம் முன்னோர்கள் காட்டிய இயற்கை வழிமுறைகளே எப்போதும் பாதுகாப்பானவை.
அந்த வகையில், 'நெல்லிக்காய்' ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும். இதில் ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது என்பது பலரும் அறியாத உண்மை. இருப்பினும், நெல்லிக்காயை வெறும் நெல்லிக்காயாக மட்டும் உண்பதை விட, சில குறிப்பிட்ட இயற்கை பொருட்களுடன் சேர்த்து எடுக்கும்போது அதன் வீரியம் பலமடங்கு அதிகரிக்கிறது.
இது உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டி, நச்சுக்களை வெளியேற்றி, செல்கள் சிதைவடைவதை தடுக்கிறது. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் சுவாச பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி போன்ற தொந்தரவுகளுக்கு இது ஒரு கேடயமாக செயல்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், நெல்லிக்காயுடன் சில குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்து உட்கொள்ளும் போது அதன் நன்மை இரட்டிப்பாகும் என்று கூறப்படுகிறது. அவை எந்தெந்த உணவுகள் என்பதை பார்க்கலாம்.
நெல்லிக்காய் மற்றும் தேன்: தேனுடன் நெல்லிக்காய் சேரும்போது அது ஒரு சிறந்த டானிக் போல செயல்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் ஒன்றிணைந்து உடலின் பாதுகாப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.
இது தொண்டைப்புண்ணை ஆற்றும், செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். சுவாசப் பாதையைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், 1 டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்: மஞ்சளில் உள்ள 'குர்குமின்' மற்றும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஒரு சக்திவாய்ந்த கலவையாகும். இவை உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது. கிருமி தொற்றுகளுக்கு எதிராக உடலை தயார்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து காலையில் குடிக்கலாம்.
நெல்லிக்காய் மற்றும் இஞ்சி: இஞ்சியின் வெப்ப தன்மையும் நெல்லிக்காயின் குளிர்ச்சியும் சமச்சீரான பலனை தருகின்றன. இஞ்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது, நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. சளி, இருமல் போன்ற பருவகால நோய்களுக்கு இது சிறந்த மருந்து.
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் இது உதவும். 2 ஸ்பூன் நெல்லிக்காய் சாறுடன் அரை டீஸ்பூன் இஞ்சிச் சாறு மற்றும் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான நீரில் அருந்தலாம்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை : இந்த இரண்டுமே வைட்டமின் சி நிறைந்தவை என்பதால், உடலின் நச்சுக்களை வெளியேற்றும் (Detox) பணியை சிறப்பாக செய்கின்றன. வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சருமம் பளபளப்பாக இருக்கவும் இந்த சாறு உதவுகிறது. உடலை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அரை எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம்.
நெல்லிக்காய் மற்றும் துளசி: துளசி ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் மன அழுத்தத்தைகுறைக்கும் (Adaptogen) பண்பு கொண்டது. நெல்லிக்காயுடன் துளசி சேரும்போது அது சுவாச ஆரோக்கியத்திற்கு உகந்தது. வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதோடு, நுரையீரலை வலுப்படுத்தும்.
ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும். சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து தேநீராகப் பருகலாம்.