செல்போன் செயலி மூலம் மும்பை தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி
செல்போன் செயலி மூலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
தெற்கு மும்பை சர்ச்கேட் பகுதியைச் சேர்ந்த 68 வயது தொழிலதிபர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது சமூக வலைதளத்தில் விளம்பரம் ஒன்றை அவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து மோகன் சர்மா என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் பேசிய ஒருவர் பங்குச் சந்தை ஆலோசகராக அறிமுகமாகியுள்ளார்.
‘‘டிரேடர் டைட்டன் விஐபி 46” என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்ட அந்த தொழிலதிபரிடம் பல முதலீட்டாளர்கள் தங்களுக்கு அதிக லாபம் கிடைத்தாக கூறிய ஸ்கிரீன்ஷாட்களை அந்த குழுவில் பகிர்ந்துள்ளனர். இதனை உண்மையென நம்பிய அந்த தொழிலதிபரிடம் பிரீமியம் உறுப்பினராக மாற தனிப்பட்ட டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறினர்.
அதில் கணக்கு தொடங்கியவுடன், தொழிலதிபர் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பும் பணம் உடனடியாக அந்தச் செயலியின் வேலட்டில் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் உண்மையாக வர்த்தகம் நடப்பதாக நம்பியுள்ளார்.
விங்ஸ் ஆப் ப்ரீடம் போன்ற பல்வேறு குழுக்கள் மூலம் அவருக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 29, 2025 முதல் ஜனவரி 19, 2026 வரையிலான குறுகிய காலத்திற்குள் சுமார் ரூ.10.98 கோடியை அவர் முதலீடு செய்தார்.
இந்நிலையில், தனது முதலீட்டை திரும்பப் பெற தொழிலதிபர் முயன்றபோது பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமானால் ரூ.8 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். சைபர் க்ரைமில் தொழிலதிபர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.