லிவ் இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி - தடுக்க வந்த தாய்க்கும் கத்திக்குத்து
ஆவடியில் 'லிவ் இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர், ராமதாசபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த கருப்பையா. இவருடைய மனைவி மங்கையற்கரசி (36). இவர்களுக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மங்கையற்கரசி, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கம்பெனியில் வேலை செய்யும்போது, அதே பகுதியைச் சேர்ந்த தங்க மாரியப்பன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த ஆனந்த கருப்பையா, மனைவியை பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு மகன், மகளுடன் சிவகாசியில் தனியாக வசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, திருநின்றவூருக்கு மீண்டும் குடிபெயர்ந்த மங்கையற்கரசி, அங்கு தனது ஒரு மகன் மற்றும் தாய் மீனாட்சியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தற்போது அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
விருதுநகரில் பழக்கமான தங்க மாரியப்பனும் திருநின்றவூரில் உள்ள மங்கையற்கரசியின் வீட்டில் 'லிவ் இன்' உறவில் ஒன்றாக தங்கியிருக்கிறார். அவர் நெமிலிச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், மங்கையற்கரசி தற்போது பணிபுரியும் கம்பெனியில் சில ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாக தெரிகிறது. வீட்டிற்கு வந்தபிறகும் அவர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியபடியே இருந்துள்ளாராம். இதனை தங்க மாரியப்பன் கண்டித்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் (ஜன 22) வேலை முடிந்தபிறகு மங்கையற்கரசியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக தங்க மாரியப்பன் அவருடைய கம்பெனிக்கு சென்றபோது, அங்கு அவர் ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனால், வரும் வழியிலேயே இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த தங்க மாரியப்பன், நேற்று மதியம் (ஜன 23), மதுபோதையில் வீட்டிற்கு வந்து, கத்தியால் மங்கையற்கரசியின் கழுத்தை அறுத்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அவரது அம்மா மீனாட்சியின் இரண்டு கைகளிலும் கத்தியால் கிழித்துள்ளார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தங்க மாரியப்பனை கைது செய்துள்ளனர்.