2000-ம் தொடக்கத்தில் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்த இந்த நடிகை, கமல், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சில நடிகைகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னாளில் அவர்களை பார்க்கும் போது, ஆளே மாறியிருக்கும் அவர்களின் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது வழக்கம். அப்படிதான் கமல், அஜித்துடன் நடித்த இந்த நடிகையின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் நடிகையின் சமீபத்திய தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஃபேவரைட் நடிகையாக நீங்கா இடம் பிடித்தவர் நடிகை வசுந்தரா தாஸ். 2000-ம் ஆண்டு கமல் நடித்த 'ஹே ராம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த வசுந்தராவுக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வசுந்தராவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது.
இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்த வசுந்தரா அதிகமாக இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அஜித்துடைய கரியரில் சிட்டிசன் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தை சரவண சுப்பையா இயக்கியிருந்தார்.
சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த கேரக்டருக்கு பிரபல நடிகை சமீரா ரெட்டியை தான் அணுகியிருந்தார்களாம். சிக்கல் என்னவென்றால் சமீராவுக்கு தமிழ் தெரியாது. இயக்குனருக்கு இந்தி வராது. இதனால் படத்திலிருந்து சமீரா ரெட்டி நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சிட்டிசன் படத்திற்கான பாடல்களை தேவா உருவாக்கிக் கொண்டிருந்த சூழலில், பூக்காரா என்ற பாடலை பாடுவதற்காக வசுந்தரா தாஸை அணுகியுள்ளார். அவர் அஜித்துடன் ஜோடியாக நடிப்பதற்கு சரியாக இருப்பார் என்று கருதிய இயக்குனர், அவரை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார்.
வசுந்தராவுக்கு நடனம் சுத்தமாக வராது. ஆனால் சிட்டிசன் படத்திற்காக அவர் மிகுந்த சிரமத்துடன் ஆடியுள்ளார். இந்த படத்தில் ஐ லைக் யூ மற்றும் பூக்காரா என்ற 2 பாடல்களை பாடியுள்ளார் வசுந்தரா தாஸ். அந்த பாடல்கள் ரசிகர்களுக்கு இன்றும் பேவரைட்.
நடிகை வசுந்தரா தாஸ் என்ற அடையாளத்தை தாண்டி, அவருக்கு பாடகி வசுந்தரா என்ற அடையாளமும் உண்டு. அதேபோல நடனத்திலும் கலக்க கூடியவர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதல்வன் படத்திற்காக இவர் பாடிய ஷகலகா பேபி பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல, விஜயின் ‘குஷி’ படத்தில் ‘கட்டிப்புடி கட்டிப்புடி டா’ பாடலை பாடியிருந்தார். ‘ரிதம்’ படத்தில் ‘அய்யோ பத்திக்கிச்சு’ பாடலை பாடினார். ஏராளமான ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் வசுந்தரா தாஸ்.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி வசுந்தரா தாஸ் என்ன ஆனார் என்று பலருக்கும் தெரியாமல் போனது. டிரம்ஜாம் என்கிற மியூசிக் பேண்ட் நடத்திவரும் வசுந்தரா தாஸ் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் நடிகை வசுந்தரா தாஸின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.