இந்திய அணியில் ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை? - தேர்வு குழுவுக்கு கங்குலி கேள்வி

இந்திய அணியில் ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை? - தேர்வு குழுவுக்கு கங்குலி கேள்வி

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தற்போதைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸைப் பார்க்கும்போது, ​​அவரால் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணி தற்சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். அதன் பிறகு, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளதுடன், துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கும் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்காததற்காக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தேர்வுக் குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள்க் கேப்டன் சவுரவ் கங்குலியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அனைத்து வடிவங்களிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கங்குலி, "ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி பவுலிங் செய்வதை நான் பார்த்தேன். அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். அவர் அற்புதமாக பந்துவீசுகிறார். அவர் தனி ஒருவராக பெங்கால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதுமட்டுமில்லாமல், இரண்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தியுள்ளார். அவரது தற்போதைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸைப் பார்க்கும்போது, ​​அவரால் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் இந்தியாவுக்காக விளையாட முடியும். ஆனால் இவ்வாறு சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது புரியவில்லை" என்றார்.

தொடர்ந்து துருவ் ஜூரெல் குறித்து பேசிய கங்குலி, "உள்நாட்டு போட்டிகளில் ஜூரெல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பந்த் அணிக்குத் திரும்பவும் தயாராக உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் நிச்சயமாக விளையாடுவார். அதேசமயம் ஃபார்மில் இருக்கும் ஜூரெலுக்கும் நாம் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சாய் சுதர்ஷனை மாற்றி அவருக்குப் பதிலாக ஜூரெலை விளையாட வைப்பது நல்லது" என்று கூறியுள்ளார்.

ஷமி குறித்து பேசினால், அவர் கடைசியாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால் அதன்பின் அவர் எந்த வடிவிலான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வரும் ஷமி, அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நிச்சயம் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு தற்போது இளம் பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தி வருவதன் காரணமாக, ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியா எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடாது என்பதால், ஷமியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதானால், இனிவரும் காலங்களில் முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.