சட்டப் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டப் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

லை என்று கூறி அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 3-வது நாள் பேரவைக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், விவசாயகளின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், கறிக் கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மின் கட்டண உயர்வு குறித்தும், சிக்குன் குனியா நோயால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க அதிமுக கோரிக்கை விடுத்தது.

வழக்கமாக கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் முந்தைய தினமோ அல்லது அன்றைய தினம் காலையிலோ அது குறித்த கடிதம் கொடுக்க வேண்டும் எனவும், ஆனால் அதிமுகவினர் திடீரென கடிதம் கொடுத்து விட்டு அதனை விவாதிக்க குரல் எழுப்புவது ஏற்க முடியாது எனவும் பேரவைத் தலைவர் அப்பாவு பதிலளித்தார்.

ஆனால் அதிமுகவினர், கவன ஈர்ப்பு தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ள மறுக்கவில்லை எனவும், அமைச்சர்கள் பதில் தயாரித்த பின்னர் நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார்.

பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்த அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, சட்டப் பேரவை நடைமுறையை மாற்றி திடீரென கேள்வியை கேட்டு, உடனே பதில் சொல்ல வலியுறுத்தியன் மூலம் அதிமுகவினர் திட்டமிட்டே நேரத்தையும், காலத்தையும் வீணடிக்கும் நோக்கில் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் நாளைய பொதுக்கூட்டம்தான் எங்கள் வெற்றிக்கு அச்சாணி - எடப்பாடி பழனிசாமி

இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

அப்போது அவர், “தமிழகம் முழுவதும் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம், தண்ணீர், தீவனம், தொழிலாளர் கூலி ஆகிய செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கூலி உயர்வை உயர்த்தித் தர வேண்டும்.

இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு அறிவித்து விட்டு, பின்னர் அதிலிருந்து அரசு பின் வாங்கி விட்டது. இதனால் 40 ஆயிரம் குடும்பங்களும், 5 லட்சம் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்ப அனுமதி கேட்ட போதும், பேரவைத் தலைவர் தொடர்ந்து மறுத்தார்” என்றார்.

தொடர்ந்து, “கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு அக்கறை காட்டவில்லை. சென்னை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்குன் குன்யா நோய் பரவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பூஜ்ஜியம் நேரத்தில் முன் வைக்க முயன்றோம்” என தெரிவித்தார்.

மக்களின் முக்கிய பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசவிடாமல் அரசு திட்டமிட்டு தடை செய்கிறது என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, இதனை கண்டித்தே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.