வயிற்று புற்றுநோய்: ஆரம்பகால அறிகுறிகள்!
நமது உடல்நலத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களை நாம் பெரும்பாலும் அலட்சியப்படுத்துகிறோம். குறிப்பாக, செரிமானம் சார்ந்த பிரச்சனைகளை சாதாரண வாயுத் தொல்லை அல்லது சாப்பிட்ட உணவு சரியில்லை என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால், வயிற்று புற்றுநோய் (Gastric Cancer) போன்ற தீவிர நோய்கள் மிக மெல்லிய அறிகுறிகளுடனேயே தொடங்குகின்றன.
இந்த அறிகுறிகள் சாதாரண செரிமான கோளாறுகளை போலவே இருப்பதால், நோய் முற்றிய நிலையிலேயே பலருக்கு இது கண்டறியப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே, உடலில் தொடர்ச்சியாக கீழ் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தெரிந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
வயிற்று புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்:
தொடர்ச்சியான செரிமானக் கோளாறு அல்லது நெஞ்செரிச்சல்: மருந்து உட்கொண்ட பிறகும் சரியாகாத செரிமான கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஒரு முக்கிய அறிகுறியாகும். அவ்வப்போது ஏற்படுவது சாதாரணமானது என்றாலும், நீண்ட நாட்களாக நீடிக்கும் அசௌகரியம் மற்றும் சிறிது சாப்பிட்டவுடனேயே வயிறு உப்பியது போன்ற உணர்வு இருந்தால் கூடுதல் கவனம் தேவை.
மிகக் குறைந்த உணவிலேயே வயிறு நிறைந்துவிடுதல்: வழக்கத்தை விட மிகக் குறைவான அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு முழுமையாக நிறைந்தது போன்ற உணர்வு (Early satiety) ஏற்படுகிறதா? இது வயிற்றுப் பகுதியில் உள்ள கட்டியால் செரிமான பாதை பாதிக்கப்படுவதைக் குறிக்கலாம். இது நீடித்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் மெலிவுக்கு வழிவகுக்கும்.
காரணமற்ற உடல் எடை குறைவு: உடற்பயிற்சியோ அல்லது உணவு கட்டுப்பாடோ இல்லாத நிலையில், தானாகவே உடல் எடை குறைவது ஒரு ஆபத்தான அறிகுறியாகும். புற்றுநோய் செல்கள் உடலின் ஆற்றலை அதிகமாக பயன்படுத்துவதாலும், பசியின்மையாலும் எடை குறையலாம்.
குறிப்பாக மேல் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடை இழப்பு என்பது உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை குறைக்கும் என Predicting unintentional weight loss in patients with gastrointestinal cancer என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தி: அடிக்கடி குமட்டல் உணர்வு ஏற்படுவது அல்லது வாந்தி எடுப்பது சாதாரணமானதல்ல. குறிப்பாக, வாந்தியில் ரத்தம் கலந்து வந்தாலோ அல்லது காபி தூள் நிறத்தில் (Coffee-ground vomitus) வாந்தி இருந்தாலோ அதை ஒரு மருத்துவ அவசர நிலையாக கருதி உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது வயிற்றில் கட்டி ஏற்பட்டு ரத்தப்போக்கு உண்டாவதை குறிக்கலாம்.
விடாப்பிடியான வயிற்று வலி: மேல் வயிற்று பகுதியில் ஒருவிதமான மந்தமான வலி அல்லது உறுத்தல் உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பது புற்றுநோயின் தொடக்கமாக இருக்கலாம். பலர் இதை அல்சர் (Ulcer) என்று நினைத்துத் தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். ஆனால், வலி குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்தால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
பசியின்மை: காரணமே இல்லாமல் பசி எடுப்பது குறைந்து போவது புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். புற்றுநோய்க் கட்டி வயிற்றின் செயல்பாட்டைப் பாதிப்பதால் உணவின் மீது ஆர்வம் குறைகிறது. இதனுடன் மற்ற அறிகுறிகளும் சேர்ந்து தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக முக்கியம்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஆனால், இந்த அறிகுறிகள் தொடர்ந்து பல வாரங்களாக நீடித்தால், அது குறித்து ஒரு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது உங்கள் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.