பாலியல் புகாரால் தற்கொலை விவகாரம்: கேரளாவில் பெண் கைது
கடந்த 16ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பெண் பயணி ஷிம்ஜிதா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல கோடி மக்களின் பார்வைகளைப் பெற்றது. இதைப் பார்த்த மக்கள் பலர், வீடியோவில் இடம்பெற்றிருந்த தீபக்கை திட்டித் தீர்த்தனர்.
மேலும், சிலர் பேருந்தில் அதிக அளவிலான மக்கள் செல்லும் நிலையில் அது தற்செயலாக நடந்திருக்கலாம் என்றும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்திருக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த வீடியோ வைரலானதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனியார் நிறுவன ஊழியரான தீபக் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக் கோடு மருத்துவக் கல்லூரி போலீஸார் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட பெண்ணை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.