ரூ. 200 கோடியில் குப்பைகளில் இருந்து மின்சாரம்! – அமைச்சர் கே.என். நேரு

ரூ. 200 கோடியில் குப்பைகளில் இருந்து மின்சாரம்! – அமைச்சர் கே.என். நேரு
சென்னை, கோவை, மதுரையில் 200 கோடி செலவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், குப்பையை எங்கு கொட்டினாலும் பிரச்சனை ஏற்படுவதாகவும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள், விடைகள் நேரத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் விஜய குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, விஜய குமாரை ரொம்ப நாளாக தேடிக் கொண்டு உள்ளதாகவும், நாங்கள் எந்த வேலை செய்வதற்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள், சொந்தமாக இடம் வாங்கி குப்பை கொட்டினாலும், கல் குவாரியில் கொட்டினாலும் பிரச்சனை ஏற்படுகிறது என்று பதில் அளித்தார்.
நகரத்தை தாண்டி 15 கிலோ மீட்டர் இடம் இருந்தாலும் அங்கு ஏற்பாடுகளை செய்து குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க தாங்கள் தயாராக உள்ளதாக கூறிய அவர், சென்னை, கோவை, மதுரையில் 200 கோடி ரூபாய் செலவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை திருப்பூரில் இருந்து தொடங்க கூட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி, ஊர்களின் பெயர் தமிழ் மொழியிலேயே தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சாமிநாதன் பதில் கொடுத்துள்ளார்.