சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்... பேரவையில் அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பு
தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி , தெரிவித்தார்.
"தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்" என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் தொகுதியில் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களின் குடும்ப அட்டையை சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டையாக மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "இந்த ஆண்டு தமிழக முதல்வர் 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கினார். இது கிடைக்காத காரணத்தால் அவர் கோரிக்கை வைக்கிறார் என்று நினைக்கிறேன்" என்றார்.
இருப்பினும் துறை அதிகாரிகள் கடைக்குச் சென்று ஆய்வு செய்து தகுதி இருந்தால், சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பதில் அளித்தார்.