பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் துன்புறுத்தல் விடுத்த தம்பதி... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் துன்புறுத்தல் விடுத்த தம்பதி... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 மற்றும் 14 வயது மாணவிகள் இருவர் தோழிகளாக இருந்துள்ளனர். அதேநேரத்தில் அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வந்த லட்சுமி என்ற தனலட்சுமி (வயது 32), விருத்தாசலத்தை சேர்ந்த அன்பு என்ற செல்வராஜ் (58) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். அந்த லட்சுமி, இரு மாணவிகளையும் ஆனந்த்ராஜின் பாலியல் தேவைகளுக்கு மிரட்டி இணங்க வைத்துள்ளார்.
தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மாணவிகளை பாலியல் ரீதியாக மோசமாக பயன்படுத்தி உள்ளனர். அதன்பிறகு அந்த மாணவிகளை தனலட்சுமி விருத்தாசலத்தில் உள்ள கலா என்பவரின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதில் தனலட்சுமி, மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு 2 நாட்கள் மாணவிகளை அனுப்பி வைத்திருக்கிறார். அச்சமயத்தில் அருள்தாஸ், அந்த 13 வயது மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் கலாவும், தனலட்சுமியும், இன்னும் இவர்களை போன்ற சிலரும் 2 மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலி ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொடர்ந்து வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர்.
இறுதியாக அரியலூர் மாவட்டம் இடையாக்குறிச்சியை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார் (39), அவரது மனைவி தமிழரசி (39) ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்க வைத்து கொடுமையை தொடர்ந்துள்ளனர். அப்போது மாணவிகள் இருவரும் சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து தப்பி போலீசில் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் சதீஷ்குமார், தமிழரசி, மதபோதகர் அருள்தாஸ், கபிலன் உள்பட 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி உள்பட 4 பேர் தலைமறைவாக இருந்தனர். மற்ற 19 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி கடந்த 2016-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான 4 பேரை தவிர 19 பேர் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போதே 2 பேர் இறந்து விட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 4.1.2019 அன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 16 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் ஒரு பெண் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் அவர்களுக்கு 7.1.2019 அன்று சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மத போதகர் அருள்தாசுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன், சலீம்பாஷா மனைவி ஜெபினா (39) ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அதில் ஜெபினா மட்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் ஜெபினா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக வழக்கு நடந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி குலசேகரன் முன்பு 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி குலசேகரன், அவர்கள் மீதான குற்றச்சாட்டை கூறினார். அதற்கு கபிலன், சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறினர். தமிழரசி தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் யாரென்று தெரியாது என்றார். இதை கேட்ட நீதிபதி, யாரை தெரியாது என்கிறீர்கள் என்றார். அதற்கு தமிழரசி பதில் சொல்லவில்லை.
இதையடுத்து அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி தண்டனை விவரத்தை அறிவித்தார். அதில், அவர்கள் 3 பேரும் 2 பள்ளி மாணவிகளை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானது. கபிலன், தமிழரசன் ஆகிய 2 பேரும் மாணவிகளை வன்கொடுமை செய்ததும் உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சதீஷ்குமாருக்கு ரூ.45 ஆயிரம் அபராதமும், தமிழரசிக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும், கபிலனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.