உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாம்ராட் ரானா சாதனை

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாம்ராட் ரானா சாதனை

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த சாம்ராட் ரானா, ஆடவருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில், உலக சம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவருக்கான 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சாம்ராட் ரானா அபாரமாக செயல்பட்டதுடன், தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளார்.

மொத்தம் 8 பேர் பங்கேற்ற இறுதிச்சுற்றில், இந்திய வீரர் சாம்ராட் ரானா 243.7 புள்ளிகளை எடுத்து முதலிடத்தை பிடித்ததுடன் தக்கப்பதக்கத்தை தனதாக்கினார். அதேசமயம் இந்த போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹூ காய் 243.3 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும், இந்திய வீரர் வருண் தோமர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் வரலாற்றில், ஒரே பிரிவில் இரு இந்திய வீரர்கள் பதக்கத்தை வென்றது இதுவே முதல்முறையாகும். மேற்கொண்டு இப்போட்டியில் சாம்ராட் ரானா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிலிருந்து முதல் உலக சாம்பியனானார்.

இது தவிர ஆடவர் அணி பிரிவிலும் இந்தியா 1,754 புள்ளிகளைப் பெற்று தக்கம் வென்று சாதித்துள்ளது. இதில் சாம்ராட் ரானா 586 புள்ளிகளையும், வருண் தோமர் 586 புள்ளிகளையும் மற்றும் ஷ்ரவன் குமார் 582 புள்ளிகளையும் பெற்று அணிக்கு வெற்றி தேடி தந்தனர். அதேசமயம் இந்த பிரிவில் இத்தாலி இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.