'பட்டம் வழங்க ஆளுநருக்கு தகுதியில்லை' - பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து அமைச்சர் கோவி.செழியன் தாக்கு!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பட்டம் வழங்க தகுதியில்லை என்று கூறி, சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், ஆளுநர் ரவி தனது உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று புறக்கணித்துள்ளார்.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு, பட்டம் வழங்கும் தகுதி இல்லை. ஆகவே சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழா
சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள செனட் அரங்கில் நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 686 பேருக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
அதே போல், இரண்டு பேர் டீ.லிட் பட்டங்களை பெறுகின்றனர். முனைவர் பட்டத்தை 951 பேர் பெற்றனர். 2024 ஏப்ரல், நவம்பர் மற்றும் 2025 ஏப்ரல் ஆகிய பருவ தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 187 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆளுநர் ரவியிடம் இருந்து நேரடியாக 1,323 பேர் பட்டம் மற்றும் பதக்கங்களை பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் இணைப்பு கல்லூரிகளில் பயின்ற ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 463 மாணவர்களுக்கும், தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற 19,859 நபர்களுக்கும் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 686 பேர் பட்டம் பெற்றனர்.