“தமிழில் சில நடிகைகளுக்கு நடிக்க தெரியாது..” - மாளவிகா மோகனன் குறிவைக்கும் நடிகை யார்?

“தமிழில் சில நடிகைகளுக்கு நடிக்க தெரியாது..” - மாளவிகா மோகனன் குறிவைக்கும் நடிகை யார்?

நடிகை மாளவிகா மோகனன் அளித்த சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன், ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகள். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்தவர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம்போலே’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்.

2015-ல் வெளியான ‘நிர்ணயகம்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘நானு மட்டு வரலட்சுமி’ படத்தின் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். ‘Beyond the Clouds’ படத்தின் மூலம் இந்தியிலும் நடிகையாக அடியெடுத்து வைத்தார். 2017-ல் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தில் நடித்திருந்தார்.

மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வந்த மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து 2021-ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்தார்.

தனுஷின் ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படத்தில் ஆராத்தி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ராஜாசாப்’ படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன்.

அடுத்து தமிழில் மாளவிகா மோகனன் நடிப்பில் ‘சர்தார் 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேர்காணல் ஒன்றில் நடிகை மாளவிகா மோகனன் கூறுகையில், “தமிழில் சில நடிகைகள் வசனம் குறித்து கவலைப்படுவதே இல்லை. சோகமாக இருக்க வேண்டிய காட்சியில் வெறுமனே முகத்தை மட்டும் சோகத்துடன் வைத்துக்கொள்கிறார்கள்.”

“சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன், டு, த்ரீ, ஃபோர் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு தான். அதேபோல கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு ஏபிசிடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். டப்பிங்கில் அதை சரிவர வசனத்துடன் பொருத்திவிடுகிறார்கள். சில நடிகைகள் தன்னுடைய மொத்த கரியரிலுமே இதை வேலையா தான் செய்கிறார்கள்” என குற்றம்சாட்டியிருக்கிறார் மாளவிகா மோகனன்.

அவர் நடிகை நயன்தாராவை தான் குற்றம்சாட்டுகிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதற்கு காரணம், முன்னதாக ஒரு பேட்டியில் நயன்தாராவின் நடிப்பு குறித்து மாளவிகா மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.