தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? எச்.ராஜா பதில்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மண்டல குழு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் நடந்த மண்டல குழு ஆலோசனைக் கூட்டங்களில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேசிய ஜனநாயக கூட்டணியில் எனது நீண்ட நாள் நண்பர் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்னும் இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் தங்கி இருந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
திமுகவின் மனநிலை 1962 ஆம் ஆண்டுக்கு முன் இருந்தது போல் உள்ளது. சட்டப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பேச விடாமல் தடுத்து மைக்கை ஆப் செய்தது அநாகரிகத்தின் உச்சம்" என்றார்.
தொடர்ந்து பேசிய எச். ராஜா, "தற்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புரட்சி பாரதம், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு தாவி கடைசியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் தயவால் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். இவர் ஐந்து கட்சிகள் மாறி மனித குலத்திற்கு விரோதமாக நடந்து கொண்டு உள்ளார்.
செல்வப்பெருந்தகை மிகவும் கீழ்த்தரமான ஒரு நபர். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். நான் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறேனா? இல்லையா? என்று கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நடத்த உள்ளது" என அவர் கூறினார்.