மாரடைப்பு ஏற்படுவதற்கு 99% இந்த 4 விஷயங்கள் தான் காரணம் - எச்சரிக்கும் மருத்துவர்!
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பு வழக்குகள் சுமார் 50% உயர்ந்துள்ளது கவலைக்குரிய விஷயமாகும்.
நகரமயமாக்கல், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் அதீத மன அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பெரும்பாலானோர் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவே நினைக்கிறார்கள், ஆனால், உள்ளுக்குள் இதயம் பலவீனமடைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.
அந்த வகையில், மருத்துவர் சுதிர் குறிப்பிடும் நான்கு மறைமுக காரணங்கள், நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான எதார்த்தமான வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மறைந்திருக்கும் 4 முக்கிய காரணங்கள்! மருத்துவர் சுதிரின் கருத்துப்படி, இந்தியாவில் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற 99% பாதிப்புகளுக்கு உடலில் ஏற்கனவே இருக்கும், ஆனால் கண்டறியப்படாத நான்கு முக்கிய காரணங்களே அடிப்படையாக அமைகின்றன.
- உயர் ரத்த அழுத்தம் (Hypertension): இது ஒரு 'சைலட் கில்லர்'. ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, அது இதய தமனிகளை சேதப்படுத்தி தழும்புகளை உண்டாக்குகிறது. இது காலப்போக்கில் மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது.
- அதிகப்படியான கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் 'எல்.டி.எல்' (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, அது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது.
- சர்க்கரை நோய் (Diabetes): ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ரத்த நாளங்களை பலவீனப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட இரு மடங்கு அதிகம்.
- புகைபிடிக்கும் பழக்கம்: புகையிலை பயன்பாடு ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இது இதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜனைக் குறைக்கிறது.
இந்த நான்கு தான் மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள் எனக்கூறும் மருத்துவர் சுதிர், இந்த நான்கு விஷயங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் மாரடைப்பு அபாயத்தில் இருந்து வெளிவரலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்! உடல் நமக்கு வழங்கும் சில சமிக்ஞைகளை நாம் அலட்சியப்படுத்த கூடாது. பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
- நெஞ்சுப் பகுதியில் நீடித்த அல்லது விட்டு விட்டு வரும் அழுத்தம் மற்றும் வலி.
- வலி கை, கழுத்து, தாடை அல்லது முதுகுப் பகுதிக்குப் பரவுதல்.
- மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்.
- குமட்டல், வாந்தி அல்லது நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு.
- திடீர் மயக்கம், தலைச்சுற்றல் அல்லது அதிகப்படியான வியர்வை.
- காரணமே இல்லாமல் ஏற்படும் அதிகப்படியான சோர்வு மற்றும் படபடப்பு.
தடுப்பு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்: இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள விலையுயர்ந்த சிகிச்சைகளை விட, எளிய வாழ்வியல் மாற்றங்களே சிறந்த தீர்வாகும் எனவும் மருத்துவர் வலியுறுத்துகிறார்.
உணவு முறை: உப்பை குறைப்பது மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். வெளி உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது இதய தசைகளை வலுப்படுத்தும். இது உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
மன அழுத்த மேலாண்மை: இன்றைய பரபரப்பான சூழலில் மன அழுத்தம் இதயத்தை பாதிக்கிறது. தியானம், யோகா அல்லது பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
தொடர் மருத்துவப் பரிசோதனை: 30 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம். குடும்பத்தில் இதய நோய் பின்னணி இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மாரடைப்பு என்பது தடுக்கக்கூடிய ஒன்றே. முறையான விழிப்புணர்வு, சரியான உணவுப் பழக்கம் மற்றும் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உங்கள் உடலின் மாற்றங்களைக் கவனித்து, ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது உங்கள் உயிரைக் காக்கும்.