"மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் நிலவும். இந்தத் தேர்தல் மூலமாக, தமிழ்நாடு இதுநாள் வரை இல்லாத அளவிலான வளர்ச்சியை பெறும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் நடைபெறும் நிலையில், அதற்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற தீவிரம் காட்டி வந்தது பாஜக. இந்த நிலையில்தான் அமமுக இணைப்பு நடந்திருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணையும்போது, ஈபிஎஸ் - அன்புமணி இருவரும் கூட்டாக அறிவித்தனர். ஆனால், இந்தமுறை, அதிமுகவினர் இல்லாமல், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் அமமுக இணைப்பு நடந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரைச் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “நாளை நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக் கூட்டம் குறித்து இன்றைய சந்திப்பில் ஆலோசித்தோம். நாளை நடைபெறும் கூட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து, சுமார் ரூ. 4.50 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் நிலவும். இந்தத் தேர்தல் மூலமாக, தமிழ்நாடு இதுநாள் வரை இல்லாத அளவிலான வளர்ச்சியை பெறும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.