பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீட்புக் குழுக்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கராச்சி மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் கடந்த சனிக்கிழமை ( ஜன.17) இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிக வளாகத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தளங்களில் கடைகளைக் கொண்டிருந்த இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) இரவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து மீட்புப் பணிக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அபித் ஜலால் பேசுகையில், “தீ அணைக்கப்பட்டதும், நாங்கள் கட்டிடம் குளிர்வடையும் வரை காத்திருக்காமல், வலுக்கட்டாயமாக உடனடியாக உள்ளே சென்று சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றோம். அப்போது மேலும் எட்டு உடல்களைக் கண்டெடுத்தோம்; அவற்றில் சில உடல்கள் கடுமையாகக் கருகியிருந்தன. தீ விபத்தால் கட்டிடத்தின் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. மேலும் பல கட்டமைப்பு இடிந்து விழக்கூடும் என்பதால், காணாமல் போனோரை தேடும் பணியை தொடர்ந்து வருகிறோம்” என்று கூறினார்.