டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகளை மாற்ற முடியாது: ஐசிசி அதிரடி

டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகளை மாற்ற முடியாது: ஐசிசி அதிரடி

 டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. 20 அணி​கள் கலந்துகொள்​ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்​டங்​கள் கொல்​கத்​தா, மும்பை​யில் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் தங்​களது அணிக்கு பாதுகாப்பு இருக்​காது என்​றும் அதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்கதேசம் விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என ஐசிசியிடம் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கோரிக்கை வைத்தது. ஆனால் வங்​கதேசத்​தின் குற்​றச்​சாட்டு மீது எந்தவித உண்​மை​யும் இல்​லை.

வங்​கதேச அணிக்கு இந்​தி​யா​வில் எந்​த​வித பாது​காப்பு அச்சுறுத்​தலும் இல்லை என ஐசிசி தெரி​வித்​தது. போட்டி தொடங்​கு​வதற்கு சில வாரங்​களே உள்​ள​தால் அட்டவணை, பயண விவரங்​களை மாற்ற முடி​யாது என தெரிவிக்​கப்​பட்​டது. மேலும் நேற்​றைக்​குள் (21-ம் தேதி) டி20 உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பது குறித்து தங்​களது முடிவை வங்​கதேசம் அறிவிக்க வேண்​டும் எனவும் இல்லை​யென்​றால் மாற்று அணி​யாக ஸ்காட்​லாந்து சேர்க்கப்​படும் எனவும் ஐசிசி தரப்​பில் எச்​சரிக்கை விடுக்கப்​பட்​டிருந்​தது.

இதற்​கிடையே வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு ஆதரவு தெரி​வித்து பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் ஐசிசி-க்கு கடிதம் அனுப்​பியது. இந்​நிலை​யில் சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் கூட்​டம் நேற்று வீடியோ கான்​பரன்ஸ் வாயி​லாக நடை​பெற்​றது.அப்​போது வங்​கதேச வாரி​யம் தரப்​பில் வைக்​கப்​பட்​டுள்ள போட்டி இடமாற்ற கோரிக்கை தொடர்​பாக ஒட்​டுடெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதில் 16 உறுப்​பினர்​களில் வங்​கதேசம், பாகிஸ்​தானை தவிர மற்ற அனைவரும் இடமாற்ற கோரிக்​கைக்கு எதிராக வாக்​களித்​தனர். மேலும் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு கூடு​தலாக ஒரு​நாள் அவகாசம் அளிக்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டது.

மேலும் இந்​தி​யா​வில் வங்​கதேசத்​துக்கு பாது​காப்​பில் குறை​வில்லை என்​றும் கடைசி நேரத்​தில் போட்​டிகளை மாற்ற முடி​யாது என்​றும் ஐசிசி சார்​பில் திட்டவட்டமாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஐசிசி வெளி​யிட்​டுள்ள அறிக்கையில், “இந்​தச் சூழ்​நிலை​யில் போட்​டிகளை இடம் மாற்​று​வது ஐசிசி-​யின் புனிதத் தன்​மைக்கு ஊறு விளை​விப்​ப​தாக அமை​யும். மேலும், உலக அரங்​கில் ஐசிசி​யின் நடுநிலைத்​தன்​மைக்​கு பாதக​மாக அமை​யும்​” எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.