ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தேர்தலுக்கு பின்னர் பேசுவோம் - அன்புமணி திட்டவட்டம்
தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்த பிறகே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து விவாதிக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இணைந்தது. இதனிடையே, நேற்று தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை, அதிமுக - திமுக இடையே தான் போட்டி. கூட்டணி ஆட்சியில் பாமக இடம்பெறுமா? அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா? என்பதை தேர்தலுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம். ஆட்சியில் பங்கு பற்றி தேர்தலுக்கு பின்னர் விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.