ரஞ்சி கோப்பை வரலாற்றில் டெல்லியை முதல் முறையாக வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் சாதனை

ரஞ்சி கோப்பை வரலாற்றில் டெல்லியை முதல் முறையாக வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் சாதனை

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பு சீசன் கடந்த அக்டோபர் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்று சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாங்காம் சுற்று ஆட்டங்கள் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கின. இதில் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி மற்றும் ஜம்மூ-காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்பின் கேப்டன் ஆயூஷ் பதோனி 64 ரன்களையும், ஆயூஷ் தொசெஜா 65 ரன்களையும், சுமித் மாத்துர் 55 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இதனால் டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஜம்மு அணி தரப்பில் அகிப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜம்மு அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். பின்னர் இணைந்த கேப்டன் பராஸ் தோக்ரா மற்றும் அப்துல் சமாத் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபதுல் சமாத் 85 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதம் விளாசிய பராஸ் தோக்ராவும் 106 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாக ஜம்மு அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்களைச் சேர்த்திருந்தது. டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டெல்லி அணியில் கேப்டன் பதோனி 72 ரன்களையும், ஆயூஷ் தொசெஜா 62 ரன்களையும், அர்பித் ரானா 43 ரன்களையும் சேர்த்து முன்னிலைப் படுத்தினர். அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 277 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஜம்மு அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஜம்மு அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வன்ஷ்ராஜ் சர்மா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜம்மு அணியில் சுபம் கஜூரியா, விவ்ராந்த் சர்மா, வன்ஷாஜ் சர்மா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் தொடக்க வீரராக விளையாடிய காம்ரன் இக்பால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தியதுடன், 20 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி 133 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.