தோல்விக்குப் பிறகு தன் அனுபவத்தைப் பகிர்ந்த ரோகித் சர்மா’

தோல்விக்குப் பிறகு தன் அனுபவத்தைப் பகிர்ந்த ரோகித் சர்மா’
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட அனுபவத்தை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா அணி தோற்றது குறித்து மனம் திறந்தார்.
தோல்விக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்ததாகவும், என்ன நடந்தது என்பதை யாராலும் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். தனிப்பட்ட முறையில் அந்த தருணம் கடினமாக இருந்ததாகவும், இந்தத் தோல்வி உடலில் இருந்து அனைத்து சக்தியையும் உறிஞ்சிவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய ரோஹித் சர்மா, "இந்திய அணிக்கு நான் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்தே உலகக் கோப்பைக்காக உழைப்பை செலுத்தினேன். உலகக் கோப்பையை வெல்வதே எனது ஒரே குறிக்கோள், அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி.
அதனால் அது நடக்காதபோது, ​​நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். தனிப்பட்ட முறையில் எனக்கு இது மிகவும் கடினமான நேரமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு என்னை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது." எனவும் கூறினார்.தோல்வியைத் தாங்குவது கடினமாக இருந்தாலும் இதோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்று நினைத்துக்கொண்டு அடுத்த போட்டியில் கவனம் செலுத்தியதாகவும் ரோகித் சர்மா தெரிவித்தார்.