“டி20 உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது விசித்திரமானது” - மனம் திறக்கும் ரோஹித் சர்மா

“டி20 உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது விசித்திரமானது” - மனம் திறக்கும் ரோஹித் சர்மா

 இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சீனியர் நட்சத்திர பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட், டி 20 போட்​டிகளில் இருந்து ஓய்வு பெற்று​விட்​டனர். இவர்​கள் தற்​போது ஒரு​நாள் கிரிக்கெட் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாடி வருகின்றனர்.

அமெரிக்கா மற்​றும் மேற்கு இந்​தி​யத் தீவு​களில் கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. முன்​ன​தாக 2007-ம் ஆண்டு ரோஹித் சர்மா இடம் பெற்​றிருந்த இந்​திய அணியும் டி 20 உலகக் கோப்பை தொடரில் வாகை சூடியிருந்​தது.

இது​வரை 9 முறை டி 20 உலகக் கோப்பை தொடர் நடை​பெற்​றுள்​ளது. இவை அனைத்​தி​லும் ரோஹித் சர்மா இந்​திய அணிக்​காக விளை​யாடி உள்​ளார். இந்​நிலை​யில் அடுத்த மாதம் பிப்​ர​வரி 7-ம் தேதி டி 20 உலகக் கோப்பை தொடரின் 10-வது பதிப்பு இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது.

நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் தொடக்க நாளில் அமெரிக்கா​வுடன் மோத உள்​ளது. இந்​தத் தொடரை முதன்​முறை​யாக 38 வயதான ரோஹித் சர்மா வெளியே அமர்ந்து கண்​டு​களிக்க உள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் கூறிய​தாவது: டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரை முதன்​முறை​யாக வீட்​டில் அமர்ந்து பார்க்க உள்​ளேன். நிச்​ச​யம் இது விசித்​திர​மாக இருக்​கும். ஏனெனில் டி 20 உலகக் கோப்பை தொடங்​கப்​பட்ட காலத்​தில் இருந்தே ஒவ்​வொரு உலகக் கோப்பையிலும் நான் பங்​கேற்​றுள்​ளேன்.

அந்த வகை​யில் முதன்​முறை​யாக வீட்​டில் அமர்ந்து போட்டியை காண்பது வித்​தி​யாச​மாக இருக்​கும். இருப்பினும், நான் மைதானத்​தில் எங்கோ இருப்​பேன். ஆனால் அது ஒரே மாதிரி​யாக இருக்​காது. வித்​தி​யாச​மான அனுபவ​மாக இருக்​கும்.

உலகக் கோப்பை தொடர்​களுக்கு முன்​ன​தாக வீரர்​கள் தேர்வு விஷ​யங்​களில் கடின​மான முடிவு​களை எடுத்த பல சந்​தர்ப்​பங்​கள் உள்​ளன. தேர்வு விஷ​யத்​தில் அனை​வரை​யும் திருப்​திப்​படுத்த முடி​யாது. ஆனால் ஒரு முடிவு ஏன் எடுக்​கப்​படு​கிறது என்​பதை தனிப்பட்ட வீரர் அறிந்து கொள்​வது முக்​கி​யம்.

2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை மற்​றும் ஆசிய கோப்பை தொடரில் பந்து வீச்சு மற்​றும் பேட்​டிங்​கிலும் சிறப்​பாக செயல்​படக்​கூடிய வீரர் தேவை என கரு​தினோம். இதன் காரண​மாக ஸ்ரேயஸ் ஐயருக்கு பதி லாக தீபக் ஹூடாவை தேர்வு செய்​தோம்.

எங்​களைப் பொறுத்​தவரை, அணி​யில் உள்ள 15 வீரர்​களை எவ்​வாறு சிறப்​பாகப் பயன்​படுத்​தலாம் என்​ப​தைப் புரிந்​து​கொள்​வது முக்​கி​யம். வீரர்​கள் தேர்​வில் உங்​களிடம் சரியான காரணம் இருந்து அதை விளக்​கி​னால் போதும்.

கடந்த டி 20 உலகக் கோப்​பைக்குப் பிறகு அணி​யில் சுமார் 80 முதல் 90 சதவீதம் பேர் அப்​படியே உள்​ளனர். அவர்​கள் கிட்​டத்​தட்ட இரண்டு ஆண்​டு​களாக ஒன்​றாக இணைந்து விளை​யாடி வரு​கின்​றனர், இது அணிக்​குள் வலு​வான புரிதலை உரு​வாக்​கும்.

உலகக் கோப்​பையை நோக்​கிச் செல்​லும்​போது, அதை வெல்​வது​தான் ஒரே குறிக்​கோள். அதற்​கு, உங்​களுக்கு வெளிப்​படை​யான உரை​யாடல்​கள் தேவை, சில சமயங்​களில் கடின​மான உரை​யாடல்​களும் தேவை. இவ்​வாறு ரோஹித் சர்மா கூறி​னார்.