நச்சுக்காற்றால் திணறும் டெல்லி ‘வெளியே செல்வது நல்லதல்ல’ - எச்சரிக்கும் சுகாதாரத் துறை!
தொடர்ந்து ஏழு நாட்களாக டெல்லி காற்றின் தரம் மிக மிக மோசமான அளவில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
பனிக்காலம் தொடங்கியதில் இருந்து தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. மிகவும் மோசமானதாக 39 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்தந்த இடங்களின் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதில், 13 இடங்கள் மிக மிக மோசமான நச்சுக்காற்றைக் கொண்டிருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான இடங்களின் காற்று தரக் குறியீடு (AQI) 400 புள்ளிகளை தாண்டியுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட கணக்கீடுகளின்படி, டெல்லியின் முண்ட்கா பகுதியின் காற்று மாசு குறியீடு அதிகபட்சமாக 435 புள்ளிகள் என்ற மிகமிக மோசமான அளவைக் கொண்டிருந்தது. முறையே, ஜஹாங்கிர்புரி (433), பவானா (430), ஆனந்த் விஹார் (423), ரோஹிணி (421), நரேலா (408), ஆர்.கே. புரம் (406), புராரி கிராசிங் (404) என்ற அளவில் மேற்காணும் இடங்களில் காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது.
இது டெல்லி காற்று தரத்தின் மிகமிக மோசமான நிலையை உணர்த்துகிறது. டெல்லியில் கண்காணிப்பில் உள்ள லோதி சாலை (286), மந்திர் மார்க் (278), தில்ஷாத் கார்டன் (255) என மூன்று இடங்களில் மட்டுமே காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்குக் கீழ் பதிவாகியிருந்தது.
பொதுவாக, 0-50 புள்ளிகள் இருந்தால் ‘நல்லது’ என்றும், 51-100 இருந்தால் ‘திருப்திகரமானது’ என்றும், 101-200 ‘மிதமானது’ என்றும், 201-300 ‘மோசம்’ என்றும், 301-400 ‘மிகவும் மோசமானது’ என்றும், 401-500 இருந்தால் ‘கடுமையானது’ எனவும் காற்றின் தரக் குறியீடு அளவுகள் வகைப்படுத்தபட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியின் பெரும்பாலான இடங்களின் காற்றின் தரம் கடுமையான அல்லது மிகமிக மோசமான நிலையில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் புறநகர் பகுதிகளிலும் காற்று மாசின் தரம் கடுமையான நிலையில் இருக்கிறது. காசியாபாத் பகுதியில் 431 புள்ளிகளும், நொய்டா பகுதியில் 400 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.
இந்த சூழலில் பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், ஏழாவது நாளாக காற்று மாசின் தரம் மோசமான நிலையில் இருப்பதால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் வெளியே செல்வதை தவிர்க்கும்படியும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், டெல்லியில் தற்போது அதிகப்படியாக 27 டிகிரி செல்சியல் முதல் குறைந்தபட்சம் 11 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் வெப்பநிலை குறைந்தபட்சம் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.