வெளியானது யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள்! தமிழ்நாட்டில் எத்தனைப் பேர் வெற்றி?

வெளியானது யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள்! தமிழ்நாட்டில் எத்தனைப் பேர் வெற்றி?

சிவில் சர்வீசஸ் எனப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளி்ட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2025 ஆண்டுக்கான குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வு முடிவு யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 2,736 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் அடுத்து தாங்கள் பங்குபெற வேண்டிய நேர்காணல் தேர்வு குறித்த விவரங்களை upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளும்படி யுபிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு (2024) யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் மொத்தம் 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 155-ஆக உயர்ந்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 13.97% அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 155 பேர்களில் 87 பேர், தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் (AISCCC) பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பயிற்சிக்கான நிதியுதவி பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜுன் மாதம் 11-ம் தேதி வெளியாகின. இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற முதன்மை தேர்வை எதிர்கொண்டனர்.