ஒரே நேரத்தில் 923 குடும்பங்கள் கொண்டாடிய 'செவ்வாய் பொங்கல்'
நாட்டரசன்கோட்டையில் அமைந்துள்ள புகழ் பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் பாரம்பரியமிக்க 'செவ்வாய் பொங்கல்' விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய செவ்வாய் பொங்கல் ஆண்டுதோறும் தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று, நாட்டரசன்கோட்டையில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்காக, திருமணம் முடிந்த ஆண் வாரிசுகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு 'புள்ளி'யாகக் கணக்கிடப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 923 புள்ளிகள் (குடும்பங்கள்) கணக்கிடப்பட்டன. குடவோலை முறையில் பொங்கல் வைப்பதற்கான வரிசை முறையைத் தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
குடவோலை முறைப்படி, வெள்ளிப் பானையில் 923 குடும்பத் தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுகள் போடப்பட்டு குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் சீட்டில் எஸ்.எம். நாராயணன் பெயர் வந்தது. இதனையடுத்து, முதல் பானை வைத்துப் பொங்கல் வைக்கும் மரியாதை அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் பொங்கிய பொங்கல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கோயில் முன்பு கூடிய நகரத்தார் பெருமக்கள் ஆயிரக்கணக்கான பானைகளை வரிசையாக அமைத்திருந்தனர். மாலை 5:05 மணியளவில் முதல் பானையில் பால் ஊற்றி விழா தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், பொங்கல் வைத்து வழிபட்ட பிறகு, இரவு 7 மணியளவில் கண்ணுடைய நாயகி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர் கிடாவெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
விழா முடிவில், பொங்கல் பானைகளைத் தலைசுமையாகச் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாகத் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் கணபதி சாமன் மற்றும் கௌரவக் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையிலானோர் செய்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு கண்ணுடைய நாயகியின் அருள் பெற்றனர்.